

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும்வகையில் மானிய விலையில் மின் மோட்டார் பம்ப் செட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உடுமலை வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில்வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட் வழங்க அரசுவழிவகை செய்துள்ளது. அதன்படி சிறு விவசாயிகள் தங்களிடம் உள்ள திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றவும், புதிய மின்மோட்டார் வாங்கவும் மானியம் வழங்கப்படும். 3 ஏக்கர் வரை நிலம் உள்ள சிறு,குறுவிவசாயிகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். வேளாண்மைபொறியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து, தங்களுக்கான நிறுவனத்தை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 அல்லது அதற்கு ஆகும் மொத்த தொகையில் 50 சதவீதம், இவற்றில் எது குறைவோ அத்தொகை விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், மார்பளவு புகைப்படம், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், சிறு,குறு விவசாயி (வட்டாட்சியர் சான்று), மின்சார இணைப்பு அட்டை விவரம் நகல், தற்போதுள்ள பம்புசெட் விவரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.