

திருநெல்வேலி மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட டவுன் நதிப்புறம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதிக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் திரண்டு டவுன் சாலியர் தெரு பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் இளவரசன் உள்ளிட்ட போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் அங்குவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார் த்தை நடத்தினர். சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.