

பொட்டாஷ் உர விலை உயர்வு, உரங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கும் தனியார் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் முக்காடு அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் தலைமை வகித்தார்.
சம்பா, தாளடி பயிர்கள் தொடர்மழை பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டுமெனில் பொட்டாஷ் உரம் மிக அவசியம் தேவைப்படுகிறது. முன்புரூ.1,040 என விற்கப்பட்ட ஒரு மூட்டை பொட்டாஷ் உரம், தற்போது கடுமையாக விலை உயர்த்தப்பட்டு, ரூ.1,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்டாஷ் உரத்தின் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு குறைக்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவு உரங்கள் இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் தனியார் உரக் கடைகளில் உரங்களை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப் பாட்டை ஏற்படுத்துகின்றனர். இத னால், கூடுதல் விலை கொடுத்து விவசாயிகள் உரத்தை வாங்கி நெற்பயிரை காப்பாற்ற வேண்டிய சூழலில் உள்ளனர். இதை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகத்தின் வேளாண்மைத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.எனவே, விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க செய்ய வேண்டும். பொட்டாஷ் உர விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும். உரங்களுக்கான மத்திய அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, இதுதொடர்பான கோரிக்கை மனுவை கும்பகோணம் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, விவசாயிகள் காலி உர சாக்குகளை தலையில் முக்காடுபோல அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.