

திருப்பத்தூர் அருகே தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி பொது மக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் நகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு திருப்பத்தூர் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் முறையாக செய்யப் படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. கடந்த 3 வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொது மக்கள் பல்வேறு பிரச்சினை களை எதிர்க்கொண்டு வந்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர்-சேலம் பிரதான சாலையில் காலிக் குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்ததும், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் மற்றும் நகர காவல் துறையினர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்திடம் பேசி 2 நாளில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர். இதனையேற்ற பொது மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.