மாற்றுச்சான்றிதழில் கட்டண பாக்கியை குறிப்பிட அனுமதித்த -  உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு வலியுறுத்தல் :

மாற்றுச்சான்றிதழில் கட்டண பாக்கியை குறிப்பிட அனுமதித்த - உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு வலியுறுத்தல் :

Published on

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் கல்விக் கட்டணம் பாக்கி எனகுறிப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா ஊரடங்கால் பொருளாதார பாதிப்புக்கு உள்ளான பெற்றோர், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை, அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டினர்.

கல்விக் கட்டண நிலுவை காரணமாக தனியார் பள்ளிகள், மாணவ, மாணவிகளின் மாற்றுச்சான்றிதழை கொடுக்க மறுப்பதாக பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக மாற்றுச்சான்றிதழ் இல்லாமலேயே, அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

மாற்றுச்சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழ்களில் கட்டண பாக்கி உள்ளது என குறிப்பிட்டு வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது நடைமுறைக்கு வந்தால், மாணவர்கள் மன துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எனவே சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள அனுமதியை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in