

சென்னை, தியாகராய நகர், வெங்கட் நாராயணன் தெரு பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் ரமேஷ் (59). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார்.
அதில், ‘`எனது பூர்வீக குடும்ப சொத்தான தியாகராய நகரில் உள்ள சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள வணிக வளாகத்தை 2005-ம் ஆண்டு சிலர் அபகரித்துவிட்டனர். போலி ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் இந்த மோசடி நடந்துள்ளது. எனவே, அவர்களை கைது செய்து எனது வணிக வளாகத்தை மீட்டுத் தர வேண்டும்'’ என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், புகார் அளித்த ரமேஷின் தாத்தா சுப்பையா கடந்த 1946-ம் ஆண்டு கிரயம் பெற்ற சொத்தை சிலர் போலியான உயில் ஆவணத்தை தயாரித்து, அதன்மூலம் 2005-ல் பெண் ஒருவருக்கு தான செட்டில்மென்ட் செய்துள்ளதும், அதைத் தொடர்ந்து நிலம் அபகரிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்த மோசடி தொடர்பாக கோடம்பாக்கம், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த லட்சுமி (51) என்பவரை கைது செய்துள்ளனர். மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.