

ஆலங்குடி அரசு கல்லூரிக்கு அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என மாநில சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாத்தம்பட்டியில் உள்ள பாப்பான் குளத்தில் 10 ஏக்கரில் அடர்வனம் உருவாக்கும் பணியை நேற்று தொடங்கி வைத்து அமைச்சர் பேசியது: ஆலங்குடிக்கு அறிவிக்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரிக்கு அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும். இதேபோன்று, ஆலங்குடி போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்குரிய திட்டமான ரூ.75 கோடியிலான புறவழிச்சாலை திட்டப் பணி விரைவில் தொடங்கும். மணமேல்குடி அருகே கோடியக்கரை சுற்றுலாத் தலம் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது என்றார்.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். கோட்டாட்சியர் அபிநயா, திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.