

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இரு நாட்களுக்கு 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனாவைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 33 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 17 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது. குஜராத்தில் 3 பேருக்கும், டெல்லியில் 2 பேருக்கும், கர்நாடகாவில் 2 பேருக்கும், ராஜஸ்தானில் 9 பேருக்கும் இந்த வைரஸ்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் மட்டும் 7 பேரிடம் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதில் 3 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பைதாராவியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் சந்தேகத்தின்பேரில் சுமார் 30 கரோனா நோயாளிகளின் மாதிரிகள் மரபணு வரிசை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நேற்று 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டது. இது இன்றும் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை போலீஸ் துணை ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், "ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அமராவதி வன்முறையை கருத்தில் கொண்டுடிசம்பர் 11, 12-ம் தேதிகளில் மும்பையில் 144 தடையுத்தரவு அமலில் இருக்கும். இரு நாட்களும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. பொதுஇடங்களில் மக்கள் கூடக்கூடாது. இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி வன்முறையை கண்டித்துசில அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் நேற்றும் இன்றும் மும்பையில்ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அவை உட்பட அனைத்து வகையான போராட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வார விடுமுறை நாட்களில் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதால் ஒமைக்ரான் வைரஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.