தனித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு - அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை மறுக்கப்படுவதாக புகார் :

தனித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு -  அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை மறுக்கப்படுவதாக புகார் :
Updated on
1 min read

தனித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை மறுக்கப்படுவதாக, தனித்தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி தனித்தேர்வை 40,000-க்கும் மேற்பட்டோர் எழுதினர்.கடந்த மாதம் 19-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பலரும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டினர். ஆனால், சேர்க்கை முடிந்துவிட்டதாகக்கூறி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு மறுக்கப்படுவதாக தனித்தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தனித்தேர்வர்கள் சிலர் கூறியதாவது: எங்களில் பலர் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் பணியாற்றிக் கொண்டே படித்து, தேர்வு எழுதினர். தனித் தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர நடப்பாண்டில் (2021-22) சேர்க்கை மறுக்கப்படுகிறது. சேர்க்கை முடிவடைந்து விட்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் காரணம் சொல்கின்றனர். இது, எங்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே தெரிகிறது. சேர்க்கை மறுக்கப்படுவதால், இன்னும் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு உரிய காலஅவகாசம் வழங்கி, பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண்டில் தனித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இதுதொடர்பாக அரசு பாலிடெக்னிக் கல்லூரி தரப்பில் சிலரிடம் பேசியபோது, “தனித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எந்த பாலிடெக்னிக் கல்லூரியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு தெரிவித்தால், மாணவர் சேர்க்கை தொடர்பாக விசாரிக்கலாம். வரும் கல்வியாண்டில், விருப்பமான பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்க ஏற்பாடு செய்யலாம்,” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in