

டெல்லி பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் ரெலிகரே எண்டர்பிரைசஸ் லிமிெடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கிருஷ்ணன் சுப்ரமணியனை கைது செய்துள்ளனர். டெல்லியில் வசிக்கும் அவரை ரூ. 2,397 கோடி மோசடி வழக்கு தொடர்பாக போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரெலிகரே பின்வெஸ்ட் லிமிடெட் (ஆர்எப்எல்) நிறுவனத்தைச் சேர்ந்த மன்பிரீத் சிங் சூரி காவல்துறையில் அளித்த புகாரில் மல்வீந்தர் மோகன் சிங், ஷிவிந்தர் மோகன் சிங், சுனில் கோத்வானி மற்றும் சிலர் இந்நிறுவனத்தில் மிக முக்கிய பதவி வகித்ததகாவும் ரெலிகரே எண்டர்பிரைசஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான ஆர்எப்எல் ஆகியவற்றில் கடனை திருப்பித் தர இயலாத நிறுவனங்களுக்கு கடன் அளித்து நிறுவனத்தின் நிதி நிலையை மோசமாக்கிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆர்எப்எல் நிறுவனத்தில் இவ்விதம் கடன் பெற்று வேண்டுமென்றே திரும்பி செலுத்தாத நபர்களால் நிறுவனத்துக்கு ரூ. 2,397 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த விவரங்கள் ரிசர்வ் வங்கி மற்றும் செபி நடத்திய பிரத்யேக தணிக்கையின்போது தெரிவிக்கப்பட்டிருந்ததையும் அவர் தனது புகாரில் சுட்டிக் காட்டியிருந்தார்.
2017-18-ம் ஆண்டு காலத்தில் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக கிருஷ்ணன் சுப்ரமணியன் பதவி வகித்து வந்தார். இந்த காலகட்டத்தில் பெஸ்ட் ஹெல்த் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட், மெசர்ஸ் விடபோ ரியால்டர்ஸ் பிரவேட் லிமிடெட் மற்றும் தேவ்ரா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ. 115 கோடி கடன் வழங்கப்பட்டது. கடனுக்கு ஈடாக அளிக்கப்பட்ட பத்திரங்கள் அனைத்தும் ஆர்எப்எல் வசம் இருந்தன.
இதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும் கார்ப்பரேட் கடனாக மாற்றப்பட்டது. அதேசமயம் ஈடாக வைக்கப்பட்ட நிலத்துக்கான ஆவணங்கள் எதுவும் ஆர்எப்எல் வசம் அளிக்கப்பட்டவில்லை என்று காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்குகளை அடகு வைக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடன் பெற்ற நிறுவனங்கள் ஈடாக வைத்திருந்த கடன் பத்திரங்கள் 2018-ல் விடுவிக்கப்பட்டன. எலிவ் என்ற பெயரில் பங்குகள் அளிக்கப்பட்டன. அதேசமயம் ரெலிகரே பிராண்டின் டிரேட் மார்க் முத்திரை சான்றும் ஆர்எப்எல் வசம் அளிக்கப்பட்டது. கடன் பத்திரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சுப்ரமணியன்தான் விடுவித்துள்ளார் என்று பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.
மல்வீந்தர் சிங், ஷிவிந்தர் சிங் மற்றும் மூன்று பேர் ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது கிருஷ்ணன் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.