

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுமார் 15 மாதங்களாக நீடித்துவந்த விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நாளை முதல் வீடு திரும்ப உள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தினர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடர்பாக விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த புதிய குழுவை அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளை திரும்பப் பெறவும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இதன்படி டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் உடனடியாக திரும்பப் பெறப்பட உள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை விடுவிக்கவும் மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு அளித்ததுபோல ஹரியாணா, உத்தர பிரதேசத்திலும் இழப்பீடு வழங்கப்படும், மின்சார சட்டத் திருத்த மசோதா தொடர்பாக விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்படும். அதன்பிறகே மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15-ல் ஆலோசனை
எங்களது பெரும்பாலான கோரிக்கை களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் எழுத்துபூர்வமாக உறுதி அளித்திருக்கிறார். எனவே போராட்டத்தை திரும்பப் பெறுகிறோம். டிச. 11-ம் தேதியை வெற்றி தினமாக கொண்டாடுவோம். அன்றைய தினம் டெல்லி எல்லைப் பகுதிகளில் இருந்து அனைத்து விவசாயிகளும் வீடு திரும்புவார்கள்.
ஜனவரி 15-ம் தேதி மீண்டும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்துவோம். மத்திய அரசு உறுதிமொழிகளை காப்பாற்றத் தவறினால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அமைக்கப்பட்ட கூடாரங்களை பிரிக்கத் தொடங்கியுள்ளனர். சொந்த ஊருக்கு திரும்ப ஏதுவாக டிராக்டர்களை தயார் செய்து வருகின்றனர்.