

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர்மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்து,10 பயனாளிகளுக்கு நிதி வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் தற்போது வரை 27,31,945 பேர் பாதிக்கப்பட்டு, 26,87,414 பேர் குணமடைந்துள்ளனர், 36,549 பேர் கரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில பேரிடர்நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போதுவரை கரோனா தொற்று தடுப்புக்காக ரூ.8,398.18கோடி மாநிலபேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவுறுத்தலின்பேரி்ல் மேற்கொள்ளப்பட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக,கடந்த மே 21-ம் தேதி 36,184 ஆகஇருந்த தினசரி பாதிப்பு, டிச.7-ம்தேதி 710 ஆக குறைந்து கரோனாகட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள் ளது. ‘ஒமைக்ரான்’ வைரஸைக் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பணியில் இருந்தபோது கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த முன்களப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படு கிறது.
தற்போதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் குடும்பங்களின் துயர் துடைக்க, அவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.182.74 கோடி நிவாரணத் தொகை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் கரோனா தொற்றால் இறப்பவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, கரோனாவால் இறந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், அதற்கான இறப்பு சான்றிதழ் வைத்திருந்தால், ‘https://www.tn.gov.in/’ என்ற இணையதளம், அருகில் இருக்கும்இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். நிவாரணம் வழங்க அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழுஅமைக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்ட தொடக்க நிகழ்ச்சியில்அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலர்வெ.இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி,சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.