

மானியத்துடன் கடனுதவி பெற்று சுய தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் விழுப்புரம் கிளை அலுவலகத்தில் (முகவரி 23-ஏ ரங்கநாதன் தெரு, ஹோட்டல் உட்லண்ஸ் காம்பளக்ஸ், முதல் மாடி, சென்னை - திருச்சி மெயின் ரோடு, விழுப்புரம்) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME)தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா இம்மாதம் 8 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இச்சிறப்பு கடன் விழாவில் மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (25 சதவீத மூலதன மானியம், 6 சதவீத வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படும். தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். நீட்ஸ் திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.