

ஒதுக்கீடு பெறப்பட்ட வீட்டுக்கான தவணைத் தொகையை 23 ஆண்டுகளாக செலுத்தாமல் வசித்து வந்த அரசு ஊழியரை வெளியேற்ற வீட்டு வசதி வாரியத்துக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு ஊழியரான ஆர்.ராஜேந்திரன் கடந்த 1988-ம் ஆண்டு ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 300 மதிப்புள்ள வீட்டை ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்து 800-க்கு முன்பணமாக செலுத்திய நிலையில், எஞ்சிய தொகையை 10 ஆண்டுகளில் செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில் மாதத் தவணையான ரூ.3 ஆயிரத்து 547-ஐ முறையாக செலுத்தாமல் ரூ.71 ஆயிரத்து 660-ஐ நிலுவைத் தொகையாக வைத்துள்ளார். இதனால் அந்த வீ்ட்டுக்கான ஒதுக்கீட்டை அதிகாரிகள் கடந்த 2002-ம் ஆண்டு ரத்து செய்தனர். தற்போதைய மதிப்பீட்டின்படி அந்த வீட்டுக்கு ரூ.55 லட்சத்து 10 ஆயிரத்து 510-ஐ செலுத்த வேண்டும் என அவருக்கு வீட்டு வசதி வாரியம் கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும், தனது பெயரில் அந்த வீட்டை பத்திரப்பதிவு செய்து தரக்கோரி அரசு ஊழியரான ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வீட்டை தன்னிடம் ஒப்படைக்கும்போது குறைபாடுகள் இருந்ததால் அதற்காக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியதாக தெரிவிக்கப்பட்டது.
வீட்டு வசதி வாரியம் தரப்பில், ராஜேந்திரன் அந்த வீட்டுக்கான தவணைத்தொகையை முறையாக செலுத்தாமல் கடந்த 23 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார். அதுமட்டுமின்றி, எவ்வித முன்அனுமதியோ, அங்கீகாரமோ பெறாமல் 2 மாடிகளை தன்னிச்சையாக கட்டியுள்ளதாகவும், அதுதொடர்பாக நோட்டீஸ் பிறப்பித்து அதன் பிறகே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, அரசு ஊழியராக இருந்து கொண்டு வீட்டுக்கான தவணைத் தொகையை முழுமையாக செலுத்தாமல், 23 ஆண்டுகளாக அங்கு வசித்து வருவதை ஏற்க முடியாது. எனவே இதுதொடர்பாக மனுதாரர் தாக்கல்செய்துள்ள மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. உரிய நடைமுறைகளை பின்பற்றி மனுதாரரை அங்கிருந்து வெளியேற்றவும், நிலுவைத்தொகையை வசூலிக்கவும் வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கில் சேலம் மாநகராட்சி ஆணையரை தாமாக முன்வந்து இணைக்கிறேன். அவர் 2 வாரங்களில் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த கட்டிடத்தை இடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை 4 வாரங்களில் எடுக்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.