பட்டு சேலை வியாபாரியிடம் ரூ.1.40 லட்சம் வழிப்பறி - போலீஸார் விரட்டிச் சென்று பிடித்ததில்ரூ.23 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் : ஆம்பூர் அருகே 7 பேர் கைது

பட்டு சேலை வியாபாரியிடம் ரூ.1.40 லட்சம் வழிப்பறி -  போலீஸார் விரட்டிச் சென்று பிடித்ததில்ரூ.23 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் :  ஆம்பூர் அருகே 7 பேர் கைது
Updated on
2 min read

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டு சேலை வியாபாரி கனகராஜ் (47). இவர், வேலூரில் உள்ள ஜவுளி கடைகளுக்கு பட்டு சேலைகளை விற்பனைக்காக வழங்கி விட்டு, சேலைகள் விற்பனை செய்த பணத்தை வசூலித்துக்கொண்டு காரில் ஆம்பூர் நோக்கி நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே கார் சென்றபோது, அங்கு போலீஸார் சீருடையில் இருந்த சிலர் காரை வழிமறித்து ஆவணங்களை கேட்பது போல் நடித்து பட்டு சேலை வியாபாரியிடம் இருந்து ரூ.1.40 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் கனகராஜ் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், காவலர்கள் போல் சீருடை அணிந்தவர்கள் சென்ற கார் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

இதற்கிடையே, பட்டு சேலை வியாபாரி கனகராஜ் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில், சென்னையைச் சேர்ந்த சிலருடன் கனகராஜ் செல்போன் பேசியது தெரியவந்தது. அந்த எண்கள் உள்ள சிக்னலை ஆய்வு செய்த போது, அது மாதனூர் அருகே இருப்பது தெரியவந்தது.

உடனே, மாதனூர் பகுதிக்கு போலீஸார் சென்றனர். அங்கு மாதனூரில் இருந்து உள்ளி செல்லும் சாலையில் ஒரு காரில் 7 பேர் கொண்ட கும்பல் காத்திருந்தனர். போலீஸார் வருவதை அறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.

அவர்களை, ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தனது ஜீப்பில் விரட்டிச்சென்றார். அப்போது, திடீரென எதிர்புறமாக திரும்பிய அந்த கார், டிஎஸ்பி சரவணன் கார் மீது மோதியது. இதில், போலீஸார் நிலைகுலைந்தனர். உடனே, அந்த காரில் வந்த நபர்கள் மாதனூரில் இருந்து ஒடுக்கத்தூர் சாலை வழியாக தப்பிச்செல்ல முயன்றனர். அதிவேகமாக சென்றபோது எம்.எம். வட்டம் என்ற பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் மீது அந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

உடனே, அங்கு திரண்ட பொதுமக்கள் காரில் வந்தவர்களை பிடித்தனர். பிறகு, போலீஸார் விரைந்து சென்று காரில் இருந்த 7 பேரை பிடித்து விசாரித்தனர். காரை சோதனையிட்டபோது ரூ.23 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டறியப்பட்டது. உடனே, அந்த பணத்தையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், 7 பேரையும் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்த திருப்பத்தூர் எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். பிறகு, கள்ளநோட்டு கும்பலுக்கும், பட்டு சேலை வியாபாரியான கனகராஜூக்கும் இடையே தொடர்பு இருந்ததும், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றபோது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக கனகராஜிடம் இருந்து ரூ.1.40 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் அபகரித்துச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, கள்ளநோட்டு கடத்திய வழக்கில் சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சுரேஷ், ரமேஷ், ஆரணியைச் சேர்ந்த பெருமாள் உட்பட 7 பேரை ஆம்பூர் கிராமிய போலீஸார் கைது செய்து, செல்போன்கள், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கனகராஜிடம் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in