

தமிழக சுகாதாரத் துறை சார்பில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
45 வயதும், அதற்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை ஒருங்கிணைத்து `மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேத்துப்பட்டு மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் பயன் அடைவதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த திட்டத்தில் மருத்துவ மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. பயிற்சியை மருத்துவமனை டீன் சாந்திமலர் தொடங்கி வைத்தார். மருத்துவ மாணவர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் என்சிடி செவிலியர்கள், மருத்துவர்களுக்கு `மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் வழிகாட்டுதல்படி மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க பயிற்சி வழங்கினர்.
இதுதொடர்பாக டீன் சாந்திமலர் கூறும்போது, ‘‘இந்த திட்டத்தில் வீடு தேடி சென்று சிகிச்சை வழங்குவது குறித்து மருத்துவ மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன்படி, அனைத்து விதமான பரிசோதனைகள் குறித்து, மருத்துவர்கள் பயிற்சி வழங்குவார்கள். `மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் வருங்கால சுகாதார கட்டமைப்பு வலுபடுத்தப்படும்’’ என்றார்.