குடியிருப்பு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றக்கோரி - தூத்துக்குடியில் 5 இடங்களில் மக்கள் மறியல் :

தூத்துக்குடி- ராமேசுவரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆரோக்கியபுரம் பகுதி மக்கள். 		 படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி- ராமேசுவரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆரோக்கியபுரம் பகுதி மக்கள். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி 5 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத் தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ளதால் தண்ணீர் மெல்ல வடியத் தொடங்கிள்ளது.

அதே நேரத்தில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் வடியவில்லை. முத்தம்மாள்காலனி, ரஹ்மத்நகர், ஆதிபராசக்திநகர், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ளது. தண்ணீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து சுமார் 400 மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மழைநீரை முழுமையாக வடிய வைக்கமுடியாமல் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது.

கடந்த 12 நாட்களாக குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைநீரில் பாசிபடர்ந்துள்ளதுடன், விஷ பூச்சிகளும் காணப்படுகின்றன.

இந்த நிலையில் மழைநீரை அகற்றக் கோரி நேற்று ஒரே நாளில் 5 இடங்களில் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி தனசேகரன் நகர் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தினர் எட்டயபுரம் சாலையில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மறியல் செய்தனர்.

இதுபோல் ஆரோக்கியபுரம், மாதாநகர், பூப்பாண்டியாபுரம், ஆ.சண்முகபுரம் பகுதி மக்கள்கிழக்கு கடற்கரை சாலையில் தனித்தனியாக மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் 5 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார்மற்றும் அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in