10 நாட்களாகியும் மழை நீர் வடியாததால் - தூத்துக்குடியில் மிதக்கும் குடியிருப்புகள் : தண்ணீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் 10 நாட்களுக்கு மேலாகியும் வடியாமல் தேங்கி நிற்கும் மழைநீர்.(வலது) தூத்துக்குடி தனசேகரன் நகர் பகுதியில்  தேங்கியுள்ள மழைநீரில் பாசி படர்ந்து சுகாதார சீர்கேடு உருவாகியுள்ளது. அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் 10 நாட்களுக்கு மேலாகியும் வடியாமல் தேங்கி நிற்கும் மழைநீர்.(வலது) தூத்துக்குடி தனசேகரன் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் பாசி படர்ந்து சுகாதார சீர்கேடு உருவாகியுள்ளது. அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
Updated on
1 min read

அவ்வப்போது பெய்யும் கனமழை மற்றும் பெருக்கெடுக்கும் நிலத்தடிநீர் ஊற்று காரணமாக தூத்துக்குடியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.

தூத்துக்குடி மாநகரம் பூகோள ரீதியாக கடல்மட்டத்தை விட சற்று தாழ்வாக இருப்பதால் ஆண்டு தோறும் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழைநீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தெருக்களில் தேங்கி நிற்கும் அவலம் தொடருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் தூத்துக்குடி மாநகரம் கடும் பாதிப்பை சந்தித்தது. அதன் பிறகு மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. வெளியிலிருந்து மழைநீர் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் வெள்ளநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. நகருக்குள் தேங்கும் மழைநீரை பம்பிங் செய்து வெளியேற்றுவதற்காக 25 இடங்களில் சம்ப் அமைத்து ராட்சத மோட்டார்கள் பொருத்தப்பட்டன.

10 நாளாகியும் வடியவில்லை

தொடர்ச்சியாக பெய்யும் கனமழை மற்றும் ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர் உள்ளிட்ட காரணங்களால் மழைநீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக பிரையண்ட் நகர், சிதம்பரநகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ராம் நகர், ஆதிபராசக்தி நகர், தனசேகரன்நகர், ராஜீவ் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்பேத்கர் நகர், குமரன் நகர், சுந்தரவேல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 நாட்களாகியும் மழைநீர் இன்னும் வடியவில்லை.

தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் சுமார் 400 ராட்சத மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கண்காணிக்க 60 வார்டுகளுக்கும் 8 துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள், 8 வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் திணறல்

பம்பிங் செய்து தண்ணீரை உறிஞ்சி எடுத்த சிறிது நேரத்தில் தண்ணீர் ஊற்றெடுத்து பெருகிவிடுகிறது. மேலும், ஒரு இடத்தில் இருந்து பம்பிங் செய்து வெளியேற்றும் போது மற்றொரு பகுதியில் தண்ணீர் தேங்கிவிடுகிறது.

இதனால் வருவாய் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் என அனைத்து துறையினரும் மிகவும் திணறுகின்றனர். தூத்துக்குடியில் ஆண்டு தோறும் நீடிக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தொலைநோக்கு பார்வையுடன் விரிவாக ஆய்வு செய்து உரிய திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): குலசேகரன்பட்டினம் 3, விளாத்திகுளம் 1, காடல்குடி 7, வைப்பார் 3, சூரன்குடி 2, கோவில்பட்டி 5, கடம்பூர் 2, வேடநத்தம் 25, கீழ அரசடி 3, எட்டயபுரம் 56.4, தூத்துக்குடி 10.4 மி.மீ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in