

முடக்கி வைக்கப்பட்டுள்ள அனைத்து என்டிசி ஆலைகளையும் இயக்க வேண்டும் என மத்திய அரசை ‘சேவ் என்டிசி' அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எல்பிஎஃப், எச்எம்எஸ், சிஐடியு, ஏடிபி, ஐஎன்டியுசி, பிஎம்எஸ், எம்எல்எஃப், டாக்டர் அம்பேத்கர், எடிஎல்எஃப் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தேசிய உடைமையாக்கப்பட்ட 13 பஞ்சாலைகளில், 7 ஆலைகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்த இந்த என்டிசி ஆலைகளை கரோனாவை காரணம் காட்டி 2020 மார்ச் மாதம் முதல் மத்திய அரசு இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் பாதி ஊதியம் மட்டுமே பெறுகிறார்கள். ஆனால், நிர்வாகப் பணியாளர்கள் முழு ஊதியமும் பெற்று வருகிறார்கள்.
எனவே, முடக்கி வைக்கப்பட்டுள்ள அனைத்து என்டிசி ஆலைகளையும் உடனடியாக இயக்க வேண்டும். ஆலைகள் இயக்கப்படாமல் இருந்த காலம் முழுமைக்கும் அலுவலர்களுக்கு வழங்கியதுபோல் தொழிலாளர்களுக்கும் முழு ஊதியம் வழங்க வேண்டும். என்டிசி ஆலைகள் இயங்குவதற்கான நடைமுறை மூலதனத்துக்காக அரசு துறைகளின் மூலம் என்டிசி-க்கு வர வேண்டிய ரூ.2,000 கோடியை வசூலிக்க வேண்டும்.
கடந்த 20 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களின் பணப்பயன்கள் தொடர்ந்து தாமதமாகிறது. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும். எங்களின் இந்த கோரிக்கைகளை பெறுவதற்கு அகில இந்திய அளவில் என்டிசி-ல் செயல்படும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ‘சேவ் என்டிசி' எனும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். அதன் அகில இந்திய தலைவராக சச்சின்அகிர், ஒருங்கிணைப்பாளராக சி.பத்மநாபன், தென்மண்டல ஒருங்கிணைப்பாளராக டி.எஸ்.ராஜாமணி ஆகியோர் செயல்படுவதென தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.