

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு.ஆடுதுறை கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கான மயானத்துக்குச் செல்லும் பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து பெட்ரோல் பங்க் கட்டிவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்துக்குச் செல்லும் சாலையை செப்பனிட்டுத் தரக் கோரி அப்பகுதி மக்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டனர்.