

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், 2021-22-ம் ஆண்டுக்கு ஊரகப்பகுதியில் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கி பெண்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியத்துக்கு 100 பெண்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 1,000 பெண்களுக்கு ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற ஏழை விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள், 60 வயதுக்குட்பட்டு இருக்க வேண்டும். கிராம பஞ்சாயத்தில் நிரந்தர முகவரிதாரராக இருக்க வேண்டும். சொந்த நிலமோ, பசு மற்றும் ஆடுகளோ வைத்திருக்கக் கூடாது. கால்நடை பராமரிப்புத் துறையின் வேறு ஏதாவது மாடு மற்றும் ஆடு வழங்கும் திட்டங்களில் பயன்பெற்றிருக்கக் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் அரசு வேலையில் இருக்கக் கூடாது.
ஆடுகளை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு விற்கக்கூடாது என பயனாளிகளிடமிருந்து ஒப்பந்தம் பெறப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்களை அளிக்கலாம் என ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.