

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான்வைரஸ் இருப்பதாக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மை அல்ல. வெளிநாடுகளில் இருந்துவந்த 2 பேருக்கு கரோனா தொற்றுமட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகே அது ஒமைக்ரானா, இல்லையா என்பது தெரியவரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற உருமாறிய கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி கிடைத்த மறுநாளே, சென்னை விமான நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தடுப்பு பணிக்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல துறைகளின் ஒருங்கிணைப்போடு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ராஜீவ் காந்தி,ஓமந்தூரார், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், மதுரை, திருச்சி, கோவை என 6 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் 40 பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய தொற்று ஏற்படும் என்று கண்டறிந்து சொன்ன மருத்துவ வல்லுநர், ஒமைக்ரான் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றுகூறியுள்ளார். ‘டெல்டா வைரஸ்போன்றவற்றைவிட ஒமைக்ரான்மிக வேகமாக பரவக்கூடியது. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருச்சியில் 2பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மை அல்ல.சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்குவந்த கே.கே.விஸ்வநாதன் (56)என்பவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனே மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அவரது மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு கருதி, பெங்களூரு இன்ஸ்டெம் பகுப்பாய்வு நிறுவனத்துக்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல, லண்டனில் இருந்து சென்னை வந்த பெண் மற்றும் 10 வயது சிறுமிக்கு தொற்று உறுதியானதால், அவர்கள் உட்பட குடும்பத்தினர் 8 பேர் சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அரசு வெளிப்படைத் தன்மையோடு நடைபெறுகிறது. எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கப்படும். தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, சென்னை கிங்இன்ஸ்டிடியூட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரையும் அமைச்சர் மா.சுப்பிரமணியனும், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனும் நேற்று இரவு கவச உடை அணிந்து சென்று அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.