சேலம் அரசு மருத்துவமனையில் - ஒமைக்ரான் சிகிச்சைக்கு 12 படுக்கையுடன் சிறப்புப் பிரிவு : மருத்துவக் கல்லூரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி தகவல்

ஒமைக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் கூடிய தனி சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக படுக்கைகளை தயார் செய்யும் ஊழியர். 				  படம்: எஸ்.குரு பிரசாத்
ஒமைக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் கூடிய தனி சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக படுக்கைகளை தயார் செய்யும் ஊழியர். படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

‘ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 12 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு தயார் நிலையில் உள்ளது,’ என அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி டீன் வள்ளிசத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் உருமாறிய தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் இருவருக்கு பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்திட மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 12 படுக்கைகள் கொண்ட தனி சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியது:

சேலம் அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 12 அறையிலும் ஆக்சிஜன் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவு, கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுடன் இணைக்கப்படாமல், தனித்து இயங்கும்.

அதேபோல, இப்பிரிவுக்கு தனி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கரோனா தொற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு பணியாற்றுவார்கள். சேலத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை.

ஒமைக்ரான் சம்பந்தமான ஆய்வு மாதிரிகள் எடுத்து, சென்னையில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி முடிவுகள் கண்டறியப்படும். புதிய வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளித்திட சேலம் அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in