அதிமுகவை சசிகலா கைப்பற்றுவதற்கு ஆதரவாக பேசினாரா? : செல்லூர் ராஜூ மறுப்பு

அதிமுகவை சசிகலா கைப்பற்றுவதற்கு ஆதரவாக பேசினாரா? :  செல்லூர் ராஜூ மறுப்பு
Updated on
1 min read

சசிகலாவுக்கு ஆதராக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அது தனது குரல் அல்ல என்று செல்லூர் ராஜூ மறுத்துள்ளார்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது அதிமுக மதுரை மாநகர் மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் கட்சித் தலைமைக்கும், செல்லூர் கே.ராஜூவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால் அப்போது முதல் தலைமை மீது அவர் வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒருவரிடம் மொபைல் போனில் சசிகலாவுக்கு ஆதரவாக செல்லூர் கே.ராஜூ பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது. அதில் பேசுபவர், தன்னை மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் என அறிமுகம் செய்து கொண்டு, ‘‘ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலாதான் அதிமுகவின் அடையாளம், உங்களை போன்ற சீனியர்தான் இந்த நேரத்தில் அவரை வழிமொழிய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

அதற்கு செல்லூர் கே.ராஜூ, ‘‘நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். அதை நாம் முறையாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மொத்தத்தையும் இழந்துவிடுவோம். அவர்கள் கட்சியை கைப்பற்றிச் சென்று விடுவார்கள். அதற்காகத்தான் அமைதியாக இருக்கிறோம். நடக்க வேண்டியதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது’’ என்று கூறுவதாக அந்த ஆடியோ உரையாடலில் இடம்பெற்றுள்ளது.

அது நான் அல்ல...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சில விஷமிகள் சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். இன்னொருவருடன் நான் மொபைல் போனில் பேசுவதுபோல் சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியாகி யுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள குரல் என்னுடையது அல்ல. யாரோ விஷமத்தனமாக என் குரல் போன்று மிமிக்கிரி செய்து பேசியுள்ளனர். அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.

கட்சியை இரு ஒருங்கிணைப் பாளர்களும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள். எனவே, அதிமுக தலைமைக்குப் புதிதாக ஒருவரை கொண்டு வரத் தேவையில்லை. எனது குரலில் மிமிக்கிரி செய்தவர் மீது கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in