அரசு வழிகாட்டுதல்படி நடந்தால் ஊரடங்கு அவசியமில்லை - தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று இல்லை : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மதுரை விமான நிலையத்தில் ஒமைக்ரான் பரவுவதைத் தடுக்க எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகளைப் ஆய்வு செய்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன் அமைச்சர் மூர்த்தி, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை விமான நிலையத்தில் ஒமைக்ரான் பரவுவதைத் தடுக்க எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகளைப் ஆய்வு செய்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன் அமைச்சர் மூர்த்தி, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று இல்லை என தெரிவித்துஉள்ள சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொது இடங்களில் அரசு வழிகாட்டுதல்படி மக்கள் நடந்து கொண்டால் ஊரடங்கு அவசியமில்லை என்றார்.

தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் மதுரைக்கு வருவோரைப் பரிசோதிக்க ஒமைக்ரான் தடுப்புப் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்த்தார்.

அப்போது ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் துபாயில் இருந்து மதுரை வந்த 6 குழந்தைகள் உட்பட 174 பேருக்கு 18 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் ஒமைக்ரான் பரிசோதனை செய்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட 11 நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 477 பயணிகளைப் பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகள், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதற்காக காத்திருப்பு அறையில் தனியாக தங்க வைக்கப்படுவர். பிறகு, அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக அறிவிக்கப்படுவர். அவர்களை சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் கண்காணிப்பர்.

புதிய தொற்று கண்டறியப்படாத நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவல் இல்லை. டெல்டா வகை கரோனா வைரஸ் மட்டுமே தமிழகத்தில் உள்ளது. பொது இடங்களில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி மக்கள் நடந்து கொண்டால் ஊரடங்குக்கு அவசியமில்லை.

மதுரை மாவட்டத்தில் 71 சதவீதம் பேர் முதல் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 32 சதவீதம் பேர் மட்டுமே 2-வது தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மதுரை மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உடன் இருந்தனர்.

கண்புரை அறுவைச் சிகிச்சை

மினி கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவர்களின் பணிக் காலம் டிச.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கண்புரை அறுவைச் சிகிச்சையை முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in