

மழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ள நீர் வடிய நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி முதல் நேரில் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
அதன்படி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரிபகுதிக்கு நேற்று முன்தினம் நேரில்சென்று பாதிப்புகளை பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், செம்மஞ்சேரி பகுதிக்கு 2-வது நாளாக நேற்றும் சென்ற முதல்வர், அப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக நேற்று முன்தினம்,செம்மஞ்சேரிக்கு செல்லும் வழியில், அலர்மேல்மங்காபுரத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் முதல்வரிடம் மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்குத் தேவைப்படும் பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாகச்சென்று வழங்குவதற்கும், மழைநீரை அகற்றுவதற்கும் துரித நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
முதல்வருக்கு மக்கள் நன்றி
அதன்பின், மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில், மழைநீர் வெளியேற 9 மீட்டர் அகலத்தில் உள்ள பாலத்தை 70மீட்டர் அகலத்தில் உயர்மட்ட பாலமாக அமைக்கும் பணியையும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து நேரடியாக பக்கிங்காம் கால்வாயை இணைக்கும் வகையில் ரூ.47 கோடி செலவில் மழைநீர்வடிகால் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, போக்குவரத்துத் துறை செயலர் கே.கோபால், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.