

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் சார்பில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன் பேசியது: 23 ஆண்டுகளுக்கு முன்பு உடலுழைப்புத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்காக நல வாரியங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த நல வாரியங்கள் மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பும் கிடைத்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கரோனா, தொடர் மழை, வெள்ளம் என தொடர்ந்து இடர்பாடுகள் இருந்தாலும் மக்களுக்குத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார் என்றார்.
பின்னர், 1,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், க.அண்ணாதுரை, எம்.எச்.ஜவாஹிருல்லா, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா வரவேற்றார். தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) க.ராஜசேகரன் நன்றி கூறினார்.