

ஈரோடு: ஓசூரில் நடந்த மாநில அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டியில், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் ஈரோடு அணி முதலிடம் பெற்று கோப்பையை வென்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநில அளவிலான இரண்டு நாள் ஐவர் கால்பந்துப் போட்டி நடந்தது. இதில், 9,12,14,16,19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 20 அணிகள் என 100 அணிகள் பங்கேற்று விளையாடின.
இதில், ஈரோடு, கோவை, திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில், 19 வயது பிரிவுக்கான இறுதிப் போட்டியில் ஓசூர் அணியும், ஈரோடு ஹாக்ஸ் அணியும் மோதியதில், 3-க்கு 2 என்ற கோல்கணக்கில் ஈரோடு அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பையும், சிறந்த வீரர்களுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.