

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக் குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. மாநில தலைவர் ரெஜிஸ் குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பாலா முன்னிலை வகித்தார். அகில இந்திய தலைவர் ரஹீம், மாநில நிர்வாகிகள் பாலசந்திரபோஸ், பிரியசித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ‘தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தவில்லை. இத்தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்.
ஆணவக்கொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரியும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் டிசம்பர் 16 -ம் தேதி மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும். பெண்கள், குழந்தைகள் மீது அதிகரித்து வரும் பாலியல் வன்முறையை தடுக்க பள்ளி, கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வர்மா குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டும், நிர்பயா நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.