

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக காரணை, தாழம்பூர், ஒட்டியம்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகள்நிரம்பி, அவற்றில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் தேங்கியதில், அப்பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன.
காய்கறி, மளிகை, பால், குடிநீர், மாத்திரை, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காககூட மக்கள் வெளியே வரமுடியவில்லை. குறிப்பாக, குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வெளியில் செல்ல முடியாததால் பெரும்பாலானோர் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், ஏராளமானோர் தனியார் பேருந்துகள், டிராக்டர்களை வாடகைக்குஅமர்த்தி, தங்கள் உடமைகளுடன் உறவினர் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்ற வண்ணம் உள்ளனர். படகுகள் மூலமாகவும் சிலர் வெளியேறி வருகின்றனர்.
சில சூப்பர் மார்க்கெட்கள், வாட்ஸ்அப் மூலமாக ஆர்டர்களை பெற்று, மளிகை பொருட்கள், காய்கறிகளை படகுகள் மூலமாகஎடுத்துச் சென்று விநியோகிக்கத் தொடங்கியுள்ளன.
செம்மஞ்சேரியில் பல நாட்களுக்கு பிறகு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் அது போதுமானதாக இல்லை என்று மக்கள் தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட தாழம்பூர் பகுதியில் அரசு சார்பில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
வெள்ளநீர் இயற்கையாக வழிந்தோட ஓஎம்ஆர் சாலை பெரும் தடையாக உள்ளது. அங்கு பல இடங்களில் நீர் வடியவழி ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.