

புதிய வகை ஒமைக்ரான் கரோனா வைரஸை கண்டறிய சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அனுமதி அளித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், கரோனா வைரஸின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் அதிவேகமாக பரவும் என்பதால், அதன் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஒமைக்ரான் வகை வைரஸை கண்டறிய சேலம் அரசு மருத்துவமனைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது:
ஒமைக்ரான் தொற்றுப் பரவலைத் தடுக்க விழிப்புணர்வுடன் செயல்பட அரசு அறிவுறுத்தி உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை கிருமி நாசினி கொண்டு, அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தில் தற்போதைய ஒமைக்ரான் வைரஸை கண்டறிவதற்கான வசதிஉள்ளது. இப்பரிசோதனைக்கு சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஒரே இடத்தில் அதிகமானவர்களுக்கு தொற்று கண்டறியப்படுவது உள்ளிட்ட சந்தேகப்படும்படியான கரோனா தொற்றுகளில் பெறப்படும் மாதிரிகள் சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கு பரிசோதனை முடிவு உறுதி செய்யப்படும்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தில், தினமும் 7,500 மாதிரிகளை பரிசோதிக்க முடியும். தற்போது, நாளொன்றுக்கு 4 ஆயிரம் முதல் 4,500 வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இனி பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.