

புதியதாக உருவாகியுள்ள ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டம் பல்வேறு மாநிலங்களுடன் தொடர்புடைய தொழில்கள் நடைபெறும் மாவட்டமாகும். எனவே, வெளி மாநிலங்களுக்கு சென்று வருவோர் மிகவும் பாதுகாப்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கரோனா முதல் அலையின் போது உயிரிழப்புகள் பெரிய அளவில் இல்லை.
அதன்காரணமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிவது தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றில் சுணக்கம் காட்டப்பட்டது. இதனால் 2-ம் அலையின்போது அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே தற்போது முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக உள்ளது.
எனவே, கரோனா தடுப்பூசியின் அவசியம் உணர்ந்து அனைவரும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் அலுவலர்கள் தங்கள் பகுதியில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணித்து பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், கோட்டாட்சியர்கள் த.மஞ்சுளா, தே.இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.