ஆண் குழந்தையை விற்றதன் மூலம் கிடைத்த - ரூ.2.5 லட்சத்தை தாயிடமிருந்து பறித்த கொள்ளையர்கள் தலைமறைவு :

ஆண் குழந்தையை விற்றதன் மூலம் கிடைத்த -  ரூ.2.5 லட்சத்தை தாயிடமிருந்து பறித்த கொள்ளையர்கள் தலைமறைவு :
Updated on
1 min read

கைக்குழந் தையை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.2.5 லட்சத்தை எடுத்துச் சென்ற தாயிடமிருந்து, அப்பணத்தை வழிப்பறி செய்தகொள்ளையர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை புழல் காவாங்கரை கே.எஸ் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் யாஸ்மின்(28). இவருக்கு 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஷர்மிளா(10) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், யாஸ்மின் இரண்டாவதாக 5 மாத கர்பிணியாக இருந்தபோது, கணவர் மோகன் அவரை விட்டுச் சென்றுவிட்டார். மேலும், யாஸ்மினுக்கு ஆஸ்துமாவும் இருந்துள்ளது. இதனால், பிறக்கும் குழந்தையை எவ்வாறு வளர்ப்பது என்று பரிதவித்துள்ளார்.

அவர் சிகிச்சைக்காக செல்லும் எல்லீஸில் உள்ள தனியார் மருத்துவமனையில், எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஜெயகீதா பழக்கமாகியுள்ளார். அவர், குழந்தையைப் பெற் றெடுத்தவுடன், அதிக விலைக்கு விற்றுத் தருவதாக ஆலோசனை கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 21-ம்தேதி வண்ணாரப்பேட்டை அரசுமருத்துவமனையில் யாஸ்மினுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 25-ம் தேதி கைக்குழந்தை, மூத்த மகள் ஷர்மிளா மற்றும் ஜெயகீதா ஆகியோருடன், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சரவணா ஸ்டோர் அருகில் யாஸ்மின் சென்றுள்ளார்.

அப்போது, எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த தனம் என்பவர் அழைத்து வந்த இருவர், வெற்று முத்திரைத் தாளில் கையொப்பம் வாங்கிக் கொண்டு, ரூ.2.50 லட்சம் கொடுத்துவிட்டு, குழந்தையை வாங்கிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, யாஸ்மினும், ஷர்மிளாவும் ஆட்டோ மூலம் வீட்டுக்குப் புறப்பட்டுள்ளனர். புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி அருகில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆட்டோ ஓட்டுநரிடம் முகவரி கேட்பதுபோல நடித்து,திடீரென யாஸ்மின் கையிலிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு, தப்பிவிட்டனர்.

இதுகுறித்த வேப்பேரி போலீஸில் யாஸ்மின் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை பணம் கொடுத்து வாங்கியவர்களே, பணத்தை வழிப்பறி செய்தார்களா அல்லது வேறுயாரும் காரணமா என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்யப்பட்டது குறித்தும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

குழந்தையை பணம் கொடுத்து வாங்கியவர்களே, பணத்தை வழிப்பறி செய்தார்களா அல்லது வேறு யாரும் காரணமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in