நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை : குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு 3,600 கன அடி நீர் வரத்து

மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பழைய குற்றாலம் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. (வலது) தாமிரபரணி ஆற்றில்  வெள்ளம் சிறிது குறைந்தது.  கொக்கிரகுளம் பகுதியில் உள்ள  மண்டபங்களையும், கரைகளில் உள்ள மரங்களையும் சூழ்ந்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. படம்: மு.லெட்சுமி அருண்
மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பழைய குற்றாலம் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. (வலது) தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சிறிது குறைந்தது. கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மண்டபங்களையும், கரைகளில் உள்ள மரங்களையும் சூழ்ந்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் குறைந்துள்ளது. நேற்று மாலை முதல் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 17 மி.மீ. மழை பதிவானது. மணிமுத்தாறில் 11.80 மி.மீ., பாளையங்கோட்டையில் 5, சேர்வலாறு, திருநெல்வேலியில் தலா 4, அம்பாசமுத்திரத்தில் 2 மி.மீ. மழை பதிவானது.

அணைகள் நிலவரம்

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,395 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. 118 அடி உயரம் உள்ள இந்த அணை நீர்மட்டம் 118 அடியாக இருந்தது. 50 அடி உயரம் உள்ள வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 37 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 346 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. 22.96 அடி உயரம் உள்ள நம்பியாறு அணை முழுமையாக நிரம்பியது. இதனால், அணைக்கு வரும் 600 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. 52.25 அடி உயரம் உள்ள கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 155 கனஅடி நீர் வந்தது. 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

தென்காசி

கடனாநதி அணைக்கு வரும் 207 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. 85 அடி உயரம் உள்ள இந்த அணையில் நீர்மட்டம் 82.70 அடியாக இருந்தது.

இதேபோல், 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 82 அடியில் நிலைநிறுத்தப்பட்டு அணைக்கு வரும் 30 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 68.24 அடியில் நிலைநிறுத்தப்பட்டு அணைக்கு வரும் 70 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளதால் அணைக்கு வரும் 30 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 129.75 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 15 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 35 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

வெள்ளப்பெருக்கு

பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளம் அருவிக்கரையில் உள்ள படிக்கட்டுகள் வழியாக சீறிப் பாய்ந்தது. ஐந்தருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in