சிறப்பு எஸ்ஐ கொலை சம்பவத்தைத் தொடர்ந்து - புதுகை மாவட்டத்தில் ஆடு திருடிய 3 பேர் கைது : 41 ஆடுகள் பறிமுதல்

சிறப்பு எஸ்ஐ கொலை சம்பவத்தைத் தொடர்ந்து -  புதுகை மாவட்டத்தில் ஆடு திருடிய 3 பேர் கைது :  41 ஆடுகள் பறிமுதல்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடு திருடி வந்த 3 பேரை கைது செய்ததுடன், 41 ஆடுகளை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஆடுகள் திருடப்பட்டு வந்தன. எனினும், பெரியளவில் நடவடிக்கை இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், ஆடு திருடிச் சென்றவர்களை விரட்டி பிடித்த, திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்(55) அண்மையில் கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆடு திருடர்களை பிடிக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்படி, ஆடுகளை கூட்டாக சேர்ந்து திருடியதாக கந்தர்வக்கோட்டை வட்டம் நெப்புகையைச் சேர்ந்த க.அழகப்பன்(52) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பூக்காரத்தெருவைச் சேர்ந்த ராசு மகன் சதீஸ்(31) ஆகியோரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 32 ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல, கந்தர்வக்கோட்டை அருகே வேளாடிப்பட்டியைச் சேர்ந்த பழனி மகன் சூரியமூர்த்தியை(47) திருமயத்தைச் சேர்ந்த மற்றொரு தனிப்படை போலீஸார் கைது செய்ததுடன், இவரிடம் இருந்து 9 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in