

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட 236 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
மழையால் மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் சேதமாகி விட்டன. தொகுப்பு வீடுகளும் சேதமாகி வருகிறது. இதேபோல் மழைக்கு நெல், ராகியைத் தொடர்ந்து காராமணி, துவரை உள்ளிட்ட பயிர்களும் சேதமாகி உள்ளன. இதனை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்கு வராமல் தடுக்க வாசனை திரவியம் பயன் படுத்தப்படுகிறது.
வனத்துறை மூலம் விவசாயிகளுக்கு அந்த திரவியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட சிறு, சிறு தடுப்பணைகள் மழைக்கு சேதமாகி உள்ளது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பதிலளித்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 48 ஆயிரம் நபர்கள் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் வீடு கட்டியிருந்தால், அவர்களுக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வழங்க இயலாது. மேலும் மழைக்கு சேதம் அடைந்த வீடுகள் மீண்டும் கட்டித்தர, கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி விண்ணப்பிக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் 25 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 4 ஆயிரம் தொகுப்பு வீடுகள் சேதமான நிலையில் உள்ளன. இதனை சீரமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
காராமணி, துவரை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மழைக்கு 965 வீடுகளும், 583 ஹெக்டேர் நெற்பயிர்கள், 14 ஹெக்டேர் கரும்பு சேதமாகி உள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயம் அடைந்துள்ளனர். 9 கால்நடைகள் இறந்துள்ளன. மழைக்கு சேதமான பயிர்கள் குறித்து தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ் வாறு அவர்கள் தெரிவித்தனர்.