

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏஐடியூசி தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம், சிஐடியூ செயலாளர் சீனுவாசன், ஐஎன்டியூசி ஞானசேகரன், ஏஐசிசிடியூ புருஷோத்தமன், எல்எல்எப் செந்தில், எம்எல்எப் வேதாவேணுகோபால், ஏஐயூடி யூசி சிவக்குமார், என்டிஎல்எப் மகேந்திரன் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங் கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், “தொழிலாளர் சட்டதொகுப்புகள் நான்கையும் கைவிடவேண்டும். மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும். தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயராலும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது. வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து, அனைத்து பொருட்க ளின் விலையேற்றத்தை கட்டுப் படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த போராட்டம் நடந்தது” என்று குறிப்பிட்டனர்.