

வருவாய்த் துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து 10பேருக்கு ஆணைகளை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் கோரி புதிதாக வந்த விண்ணப்பங்களில் மாநிலஅளவில் 1,01,474 தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் விதமாக, இந்திராகாந்தி தேசியமுதியோர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 48,077 பயனாளிகள், தேசியமாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் - 1,359 பேர், தேசிய விதவைகள் ஓய்வூதியம் - 4,346 பேர், மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியம் - 14,739 பேர், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் - 28,209 பேர், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம்- 2,397 பேர், ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியம் - 1,732 பேர், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் - 554 பேர், முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியம் - 61 பேர் என மொத்தம் 1,01,474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவுகளை வழங்கும் அடையாளமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று 10 பேருக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.