

கடலூர் திமுக எம்பி ரமேஷ் மீதான கொலை வழக்கு விசாரணையை விழுப்புரம் கூடுதல் எஸ்பி கண்காணிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பனிக்கன்குப்பம் பகுதியில் திமுக எம்பி ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி கோவிந்தராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் திமுக எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதையடுத்து அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் திமுக எம்பி என்பதால் அவருக்கு சிறையில் சலுகை காட்டப்படுகிறது எனக் குற்றம் சாட்டி, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி இறந்த கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது.
அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெற்று வருவதாகவும், புதிய விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் சுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ இந்த வழக்கை சிபிசிஐடி புதிய விசாரணை அதிகாரி தனது விசாரணையை தொடரலாம். அதை விழுப்புரம் கூடுதல் எஸ்பி கண்காணிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை முடித்து வைத்துள்ளார்.
புதிய விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் சுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.