அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் - மங்கலான முகப்பு விளக்குகளால் விபத்து அபாயம் : உடனடியாக மாற்ற ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் -  மங்கலான முகப்பு விளக்குகளால் விபத்து அபாயம் :  உடனடியாக மாற்ற ஓட்டுநர்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

திருச்சி மண்டலத்துக்குட்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மங்கலான முகப்பு விளக்குகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, அவற்றை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருச்சி மண்டலத்துக்குட்பட்ட பெரும்பாலான பேருந்துகளில் முகப்பு விளக்கு கூடுகள் பல ஆண்டுகளாகியும் மாற்றப்படாமல் உள்ளதால், அவை மங்கலாக மாறி, போதிய வெளிச்சம் கிடைப்பதில்லை என்றும், இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பேருந்து ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் திருச்சி மண்டல பொதுச் செயலாளர் ஆர்.பெருமாள், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

திருச்சி மண்டலத்துக்குட்பட்ட 14 பணிமனைகளிலிருந்து 850-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இதில் 150-க்கும் அதிகமான பேருந்துகளில் முகப்பு கூடுகள் மிகவும் பழையதாக உள்ளதால் விளக்குகள் மங்கலாக எரிகிறது. இதனால், இந்தப் பேருந்துகளை பனிக் காலம், மழை பெய்யும் நேரங்களில் இயக்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறோம். ஆனால், நிதி இல்லை என்ற காரணத்தைக் கூறி முகப்பு விளக்குக் கூடுகளை மாற்றித் தராமல் தொடர்ந்து தாமதம் செய்யப்படுகிறது. ஜனவரி மாதம் வரை மழையும், பனிப் பொழிவும் இருக்கும் என்பதால், மங்கலான முகப்பு விளக்குக் கூடுகளை மாற்ற நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சென்னைக்கு இயக்கப்படும் டீலக்ஸ் பேருந்துகள் பெரும்பாலானவற்றில் மழைக்காலத்தில் ஒழுகுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இதனையும் சீரமைக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல மேலாளர் எஸ்.சக்திவேல் கூறும்போது, “நடைமுறை சிக்கல் காரணமாக சில நேரங்களில் ஆர்டர் செய்யப்பட்ட உதிரிப் பாகங்கள் வருவதில் தாமதம் ஏற்படும். பேருந்துகளுக்கு தேவையான உதிரிப் பாகங்கள் தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில்கூட ரூ.23,000 மதிப்பில் முகப்பு விளக்குகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டன’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in