ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தேங்கும் மழைநீர்; ஆங்கிலேயர்கள் ஆட்சி கால கால்வாயை மீட்க தயக்கம்: மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு

வேலூர் கோட்டை அகழியில் தண்ணீர் அதிகரித்துள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் கடந்த சில நாட்களாக மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது. இதனை, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் கோட்டை அகழியில் தண்ணீர் அதிகரித்துள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் கடந்த சில நாட்களாக மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது. இதனை, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கால்வாயை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூரில் 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர் சதாசிவராயர் ஆட்சிக் காலத்தில் பொம்மி ரெட்டி, திம்ம ரெட்டியால் வேலூர் கோட்டை கட்டப்பட்டது. 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட அகழியுடன் இருக்கும் கோட்டை ராணுவ ரீதியாகவும் சிறப்புப் பெற்றது. வேலூர் கோட்டை விஜயநகர பேரரசு, பிஜப்பூர் சுல்தான்கள், மராட்டியர்கள், முகலாயர்கள் வசமிருந்த வேலூர் கோட்டை 1760-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். தற்போது, வேலூர் கோட்டை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வேலூர் கோட்டை ஆங்கிலே யர்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது நீர்மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாக மாற்றியமைத் தனர். கோட்டையின் அகழியில் எப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில் கோட்டைக்கு எதிரேயுள்ள மலைகளில் இருந்து வரும் நீரை சேமிக்கவும் உபரிநீர் பாலாற்றுடன் கலக்கும் வகையில் மதகுகளுடன் கூடிய கால்வாய்ளை கட்டமைத்தனர்.

கோயிலில் தேங்கும் மழைநீர்

வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் கோட்டை அகழி முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக, ஜலகண்டேஸ்வரர் கோயில் வளாகம் சுமார் 3 அடி அளவுக்கு தண்ணீரால் நிரம்பியுள்ளது.

அகழியின் அதிகப்படியான தண்ணீரால் கோயிலில் இருந்து தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 3 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த பிரச்சினை தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, தண்ணீர் வெளியேறும் பகுதியில் அடைப்பை ஏற்படுத்தி தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘இப்போ தைக்கு தற்காலிகமாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தாலும் அகழியில் தேங்கியுள்ள தண்ணீரில் 5 அடி அளவுக்கு வெளியேற்ற வேண்டியுள்ளது. இதற்கு, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கால்வாயை மீட்க வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வு.

கோட்டை அகழியின் உபரி நீர் வெளியேறும் கால்வாய் சாலைக்கு அடியில் கடந்து புதிய மீன் மார்க்கெட் அருகில் உள்ள கால்வாய் வழியாக நிக்கல்சன் கால்வாயுடன் இணைகிறது. தூர்ந்துபோன அந்த கால்வாய் தோண்டப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கால்வாயை மீட்க சிலர் தயங்குகின்றனர்’’ என்றனர்.

ஜலகண்டேஸ்வரர் கோயில் நிர்வாகத்தரப்பில் விசாரித்தபோது, ‘‘மழைநீர் தேங்குவதால் மூலவருக்கு பால், தயிர் அபிஷேகம் நிறுத்தப்பட்டுள்ளது. பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் அபிஷேகம் மட்டும் நடக்கிறது. தண்ணீரை வெளியேற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். வரும் நாட்களில் இந்த பிரச்சினை மீண்டும் வரக்கூடாது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in