

தமிழகத்தில் இறக்குமதி பஞ்சுக்கான விலையை குறைப்பதுடன், பஞ்சு, நூல் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளான நூலின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வருகிறது. இதனால் ஆடை தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தின் 45 சதவீத நூற்பாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ளது. கடந்த 10 மாதங்களில் அனைத்து நூல்ரகங்களும் கிலோவுக்கு ரூ.120 வரை விலை உயர்ந்துள்ளது. இந்தமாதத்தின் முதல் வாரத்தில் அனைத்து ரகங்களுக்கும் கிலோவுக்கு அதிரடியாக ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி ஈட்டித்தரும் திருப்பூரில், நாட்டின் 60 சதவீத பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நூல் விலை உயர்வால் ஏற்கெனவே எடுத்த ஆர்டர்களை முழுமையாக செய்து முடிக்க முடியாமலும், புதிய ஆர்டர்களைப் பெற முடியாமலும் திண்டாடி வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறிக் கூடங்கள் இந்த விலை உயர்வால் இயங்க முடியாத சூழலில் தடுமாறி வருகின்றன.
இந்த விலை உயர்வு, கைத்தறிமற்றும் விசைத்தறி நெசவாளர்கள்,பின்னலாடை உற்பத்தியாளர்களிடம் மிகுந்த அதிருப்தி, மற்றும் தொழில் எதிர்காலம் குறித்த ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வுக்கு பதுக்கல், இறக்குமதி பஞ்சுக்கான வரி உயர்வு மற்றும் செயற்கை தட்டுப்பாடே காரணம் என்கின்றனர்.
இதையடுத்து, நெசவாளர்கள், ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை தயாரிப்பாளர்கள் மாவட்டந்தோறும் தங்கள் எதிர்ப்பை காட்டிவருகின்றனர். ஈரோட்டில் கடையடைப்பை நடத்தி விலை உயர்வுக்கான எதிர்ப்பை காட்டி, நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். நூல்விலை உயர்வால் இத்தொழிலில்ஈடுபட்டுள்ள 35 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம்இம்மாதம் 26-ம் தேதி முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியில், கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஜூலை மாதத்திலேயே இலவச வேட்டி, சேலைக்கான ஆர்டர் வழங்கும் போது, நூலும் வழங்கப்பட்டுவிடும். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பின் இலவச வேட்டி சேலைக்கான ஆர்டர் நவம்பர் மாதம்தான்வழங்கப்பட்டது. ஆனால், முழுமையாக நூல் வழங்கப்படவில்லை. விலை உயர்வால், வெளிச்சந்தையில் நூலை வாங்க முடியாமலும், வேட்டி சேலை, உற்பத்தி செய்யமுடியாமலும் தவித்து வருகின்றனர்.
எனவே, ஜவுளி உற்பத்தியாளர், கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை அழைத்து பேச வேண்டும். இறக்குமதி பஞ்சுக்கான வரியை குறைக்கவும், மூலப்பொருள் ஏற்றுமதியை தடைசெய்யவும், நிர்வாக ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நூலுக்கு மானியம் வழங்க வேண்டும். நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்ய ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும். இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கான நூலை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.