

கனமழையால் ரத்து செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணத் தொகை எவ்வித பிடித்தமும் இன்றி திருப்பிஅளிக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களின் சேவைகள்ரத்து செய்யப்பட்டன.
குறிப்பாக, சென்னையில் இருந்து அகமதாபாத், புதுடெல்லி,மும்பை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சேதமடைந்திருந்த தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு மீண்டும் வழக்கம்போல் ரயில்கள்இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கனமழையால் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் கட்டணத் தொகை முழுவதும் சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு வழங்கப்படும். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்குக்கு கட்டண தொகைஅடுத்த சில நாட்களில் அனுப்பப்படும். முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் அருகேயுள்ள மையங்களில் கட்டணத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்’’ என்றனர்.