

அம்பத்தூரில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் கள்ளச் சந்தையில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் தனராஜ் மற்றும் காவலர்கள், அம்பத்தூர் பட்டரவாக்கம் பிடாரி அம்மன் கோயில் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியில் 8,000 லிட்டர் வாகன எண்ணெய் இருந்தது தெரியவந்தது. அந்த லாரியில் இருந்து, நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த மற்றொரு டேங்கருக்கு எண்ணெய் ஊற்றி, அதில் கலப்பட எண்ணெய் சேர்த்து, பின்னர் அந்த எண்ணெய் பேரல்களில் நிரப்பப்பட்டு, அவை சென்னை முழுவதும் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டுசெல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, லாரி ஓட்டுநர் சசிகுமார்(41), கலப்பட எண்ணெய் விற்பனையாளர்கள் முத்துராசா(60), முத்துகிருஷ்ணன்(38) ஆகியோரைக் கைது செய்த போலீஸார், கலப்பட எண்ணெய் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, 9 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.