

கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று, தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மம்தா(39). இவரது கணவர் அடிக்கடி குடிபோதையில் மம்தாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் விரக்தியடைந்த மம்தா, கடந்த 8.10.2015 அன்று கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது மகள் யாக்ஷி (12), மகன் குர்ஷித்(7) ஆகியோரை பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் சர்க்கரை நோய்க்கான மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டு, மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் வசித்தவர்கள் மம்தாவை மீட்டனர். இதில் அவர் உயிர் பிழைத்தார். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.டி.நாகேந்திரன் ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட மம்தா மீதான கொலைக்குற்றச்சாட்டு அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக்கூறி அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்த தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.