சென்னை கிண்டி ராஜ் பவனில் நேற்று நடந்த விழாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில், முதல்வர்  ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.படம்: பு.க.பிரவீன்
சென்னை கிண்டி ராஜ் பவனில் நேற்று நடந்த விழாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில், முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.படம்: பு.க.பிரவீன்

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக - முனீஸ்வர் நாத் பண்டாரி பதவியேற்பு : ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்

Published on

சென்னை உயர் நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத்பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழா நேற்று காலை 9.30மணிக்கு நடந்தது. பொறுப்புதலைமை நீதிபதி முனீஸ்வர் நாத்பண்டாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

பொறுப்பு தலைமை நீதிபதிக்குமுதல்வர் ஸ்டாலின் மலர்க் கொத்தும், நினைவுப் பரிசும் வழங்கினார்.விழாவில் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், பேரவைத் தலைவர் அப்பாவு, எதிர்க்கட்சிதலைவர் பழனிசாமி, எதிர்க்கட்சிதுணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்ற நீதிபதிகள்,பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி, தலைமைச்செயலர் இறையன்பு, மூத்த வழக்கறிஞர்கள், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற கூட்டரங்கில் பொறுப்பு தலைமை நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழகஅரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் வழக்கறிஞர் சங்க தற்காலிக நிர்வாகக் குழு தலைவர் ரங்கபாஷ்யம் , பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ்,லா அசோசியேஷன் துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் வரவேற்றுப் பேசினர். வழக்குகளை விசாரிப்பதற்கும், நீதி பரிபாலனம் வழங்குவதிலும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் ஏற்புரை ஆற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறியதாவது:

தமிழகம் வருவதையொட்டி நேற்று முதல் தமிழ் கற்க தொடங்கியுள்ளேன். தற்போது வணக்கம், நன்றி ஆகியவற்றை கற்றுக் கொண்டுள்ளேன்.

தமிழகத்தில் பிறக்க ஆசை

பதவியேற்பு உறுதிமொழி ஏற்றதுபோல, நீதி பரிபாலனத்தில் பயமோ, பாரபட்சமோ இருக்காது. இந்த விழாவில் நிறைய பேச விரும்பவில்லை. எதையும் செயலில் காட்டவே விரும்புகிறேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, 1960 செப்.13-ம் தேதி ராஜஸ்தானில் பிறந்தார். மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றிய இவர், ரயில்வேமற்றும் அணுசக்தி துறை வழக்கறிஞராக உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். 2007-ல்ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். 2019-ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அந்த உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை பணியாற்றினார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள பொறுப்பு தலைமை நீதிபதியையும் சேர்த்தால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பணியிடங்கள் 75. இன்னும் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in