

பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்தான ‘கரோனில்’ பற்றி ஜெர்மனியில் இருந்து வெளியாகும் ‘ஜர்னல் ஆஃப் செபரேஷன் சயின்ஸ்’ சர்வதேச ஆய்வு இதழின் முதல் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‘கரோனில்’ (Coronil) ஆயுர்வேத மருந்து பதஞ்சலி நிறுவனத்தின் சிறந்த ஆராய்ச்சியின் விளைவாக உருவாக்கப்பட்டதாகும். இதுகுறித்த விவரம் ஜெர்மனியில் இருந்து வெளியாகும் ‘ஜர்னல் ஆஃப் செபரேஷன் சயின்ஸ்’ என்ற சர்வதேச ஆய்வு இதழின் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த இதழின் முதல் பக்கத்தில் வெளியாகும் முதல்ஆயுர்வேத மருந்து என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
கரோனா பேரிடரின்போது லட்சக்கணக்கான உயிர்களை கரோனில் மருந்து காத்துள்ளது. மேலும் நோயாளிகளை பயம், பதற்றத்தில் இருந்தும்; அதைவிட முக்கியமாக இந்த நோய் குறித்த பீதியை ஏற்படுத்துபவர்களிடம் இருந்தும் காத்துள்ளது.
மனித வரலாற்றில் ஆராய்ச்சி வெளியீடுகளின் அடிப்படையில், சர்வதேச அளவிலான அறிவியல் அங்கீகாரத்தைப் பெற்றமிகவும் மேம்பட்ட மற்றும் ஆழ்ந்த அறிவியல் ஆராய்ச்சியைக் கொண்ட ஒரே ஆயுர்வேத மருந்து கரோனில் மட்டுமே.
கரோனில் மிகவும் பயனுள்ள மருந்து என கண்டறியப்பட்டுள்ளது. வெவ்வேறு தொகுதிகளில் ஒரே மாதிரியான தரத்துடன் இது செயல்பட்டது, ஆயுர் வேதத்தின் சிறப்பில் ஒருபுதிய பரிமாணத்தை சேர்க்கிறது.
இவ்வாறு பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.