

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. ‘விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்' என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை ஆட்சியர் வழங்கினார்.
மின்னல் தாக்கி உயிரிழந்த ஒரு நபரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் மனு அளித்த இளைஞருக்கு ஜவுளி வியாபாரம் செய்ய ரூ.25 ஆயிரம் மானியத்தில் ரூ.1 லட்சம் கடனுதவி ஆகியவற்றையும் ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்' என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் துறையை அணுகலாம். 1,222 டன் யூரியா அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்பிக் நிறுவனம் சார்பில் 400 டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்கோ மூலம் 350 டன் யூரியா உரம் வரவுள்ளது. மாவட்டத்தில் இப்போதைக்கு யூரியா உரம் தட்டுப்பாடு இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக் காலங்களில் 20 நாட்களுக்கு மேல் தாமிரபரணியில் 30 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. நான்கு பிரதான கால்வாய்கள் மூலம் 2,000 முதல் 3,000 கன அடி தண்ணீர் தான் எடுக்க முடிகிறது. மீதமுள்ள தண்ணீர் வீணாகச் செல்கிறது. இதனைத் தடுக்க நான்கு பிரதான கால்வாய்களையும் அகலப்படுத்தி கொள்ளளவை அதிகரிப்பது தான் ஒரே வழி. நான்கு பிரதான கால்வாய்க ளிலும் 6,000 கன அடி முதல் 8,000 கன அடி வரை தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய்களை அகலப் படுத்த வேண்டும். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.