

ஆண்டியப்பனூர் அணை கட்ட நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 18-ம் தேதி கனமழை பெய்தது. இதனால், திருப்பத்தூர் மாவட்டத்திலும் வரலாறு காணாத மழை பதிவானது. தமிழக-ஆந்திர எல்லையில் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகபட்ச மழை பெய்தாலும் பெரும்பாலான ஏரிகள் நிரம்பாமலேயே உள்ளன.
பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 25 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்ந்து போயிருப்பது தான் என விவ சாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கூறும் போது, ‘‘திருப்பத்தூர் வட்டம், ஆண்டியப்பனூர் கிராமத்தில் கடந்த 1997-ம் ஆண்டு ஆண்டியப் பனூர் ஓடை நீர்த்தேக்கம் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு, பணிகள் தொடங்கப்பட்டு கடந்த 2007-ம் ஆண்டு ஆண்டியப்பனூர் அணை திறக்கப்பட்டது. 216 ஏக்கர் பரப்பளவு கொண்ட அணையின் உட்பகுதியில் மண் மேடாக இருப்பதால் 30% மட்டுமே தண்ணீர் நிரம்புகிறது. அணை கட்டுவதற்காக நிலம் வழங்கிய 86 விவசாயிகளுக்கும், கால்வாய் அமைப்பதற்காக நிலம் வழங்கிய 225 விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அணையில் இருந்து நீர்பாசனத்துக்கு 14 கி.மீ., நீளத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டியப்பனூர் அணை முறையாக பராமரிக்கப்படுவ தில்லை. இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் சார்பில் பல முறை ஆட்சியர் அலுவலகம், நீர்வளத்துறை, சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதேபோல அணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டும் மனு அளித்து வருகிறோம். அதற்கும் பதில் இல்லை. நீர்வரத்துக் கால்வாய் பகுதிகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடிமராமத்து பணிகள் சரிவர செய்யப்படவில்லை. இதனால், பெரு மழை பெய்தும் எந்த பயனும் இல்லாமல் போய் விட்டது. மழைநீரை சேமித்து வைப்பதற்கான எந்தப் பணிகளும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளவில்லை.
மாவட்டத்தில் உள்ள ஏரிகளை அளவீடு செய்ய வேண்டும். நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வார வேண்டும். மழைநீரை சேமிப்பதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.