

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போது பெய்துவரும் கனமழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், மழைநீர் கடலில் கலந்து, வீணாகி வருகிறது. இதனால், கோடைக்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும்.
அணைகள், ஆறுகள், குளங்கள், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை தமிழக அரசு பாதுகாக்கத் தவறியதால், கோடைகாலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. எனவே, மழைநீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நீர்நிலைகளைத் தூர்வாருதல், புதிய தடுப்பணைகள் கட்டுதல் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மழைநீரைச் சேமிக்க முடியும். மேலும், தொலைநோக்குப் பார்வையுடன், மழைநீர் சேமிப்புக்கு புதிய செயல் திட்டத்தை தமிழக அரசு வகுத்து, உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.